ஓட்டலில் சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மேலாளர் கைது

திருச்செந்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டர் மீது ெகாதிக்கும் எண்ணெயை ஊற்றிய மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-26 15:01 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் தெற்கு புதுத்தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 56). இவர் திருச்செந்தூர் கோவில் வாசல் அருகே ஒரு தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வெள்ளையன் சமையல் செய்து கொண்டு இருந்தபோது, அதே ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வரும் பாலமுருகன் சமையலறைக்குள் வந்தார். 

அவர் வடை கறியில் உப்பு அதிகமாக உள்ளதாக கூறி, வெள்ளையனை சத்தம் போட்டார். அதற்கு வெள்ளையன், உப்பு சரியாக தான் உள்ளது என்று கூறி உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது பாலமுருகன் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை சில்வர் கப்பில் எடுத்து, வெள்ளையன் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் வெள்ளையனுக்கு முகம், தலை, தோள்பட்டை, முதுகு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. 

இதனால் வேதனையில் அலறித்துடித்த அவரை ஓட்டலில் இருந்த சக ஊழியர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.  இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்