கோவை
கோவை செல்வபுரம் தேவேந்திரா வீதியை சேர்ந்தவர் இந்திரகுமார் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவர், இரட்டை கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள விஜயராஜ் என்பவரின் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். அதை தன்னிடம் தரும்படி விஜயராஜின் நண்பர் ரஜித் குரு என்கிற கும்கி கேட்டு உள்ளார். ஆனால் அதை கொடுக்க இந்திரகுமார் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் போயர் வீதி வழியாக இந்திரகுமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரஜித்குரு மற்றும் அவரது நண்பர்கள் இந்திரகுமாரை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரஜித்குரு மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இந்திரகுமாரை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜித்குருவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் மணிகண்டன், ஜீவானந்தம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ரஜித் குரு அளித்த புகாரின் பேரில் இந்திரகுமார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
---------