ஊட்டியில் கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல்

ஊட்டியில் 5 கடைகளில் விற்ற கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 5 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-04-26 13:43 GMT
ஊட்டி

ஊட்டியில் 5 கடைகளில் விற்ற கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 5 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 

கலப்பட தேயிலைத்தூள்

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாத கோடை சீசனை அனுபவிக்க தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகின்றனர். இதன்படி கடந்த சில நாட்களாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இவர்கள் பஸ் நிலையம் மற்றும் சுற்றுலா தலங்கள் அருகில் குளிருக்கு இதமாக டீ குடிக்கின்றனர். மேலும் தங்களது ஊர்களுக்கு ஊட்டியிலிருந்து தேயிலைத்தூள் வாங்கி செல்கின்றனர்.
இந்தநிலையில் பஸ் நிலையம் மற்றும் சுற்றுலாத் தலங்கள் அருகில் உள்ள சில டீக்கடைகள் மற்றும் டீ தூள் விற்பனை செய்யும் இடங்களில் கலப்பட தேயிலைத்தூள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் வந்தது. இதன்பேரில் மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்பேரில் மாவட்ட நியமன அலுவலர் எஸ்.பி.சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஊட்டி நகரில் பல்வேறு இடங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகளில திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அபராதம்

இதில் கலப்பட தேயிலைத்தூள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து கலப்பட தேயிலைத்தூள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஊட்டி பஸ் நிலையம், மார்க்கெட் ஏ.டி.சி. பகுதிகளில் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 10 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கலப்பட டீத்தூள் விற்பனை செய்ததாக 5 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தலா ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கலப்பட தேயிலைத்தூள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்