நோய்வாய்ப்பட்ட கணவரை குணப்படுத்த பரிகார பூஜை செய்வதாக பெண்ணிடம் பணம் பறித்த ஜோதிடர்

கோத்தகிரியில் நோய்வாய்ப்பட்ட கணவரை குணப்படுத்துவதாக பெண்ணிடம் பணம் பறித்த ஜோதிடரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-26 13:43 GMT
கோத்தகிரி

கோத்தகிரியில் நோய்வாய்ப்பட்ட கணவரை குணப்படுத்துவதாக பெண்ணிடம் பணம் பறித்த ஜோதிடரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பரிகார பூஜை 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக  ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர், பொதுமக்களிடம் ஜோசியம் பார்ப்பதாகக் கூறி நடமாடி வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி கிளை நூலகம் முன் ஜோசியம் பார்ப்பதாக அமர்ந்திருந்த ஒரு இளைஞர் அவ்வழியாக நடந்துச் சென்ற பரவக்காடு கிராமத்தைச் சேர்ந்த மலர்மணி என்ற பெண்ணிடம் ஜோசியம் பார்க்க ரூ.20 கட்டணம் எனக் கூறி ஜோசியம் பார்த்துள்ளார். 
அப்போது அந்தப் பெண் தனது கணவரான குமார் நோய்வாய்ப்பட்டு மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு ஜோசியம் பார்ப்பதாகக் கூறிய நபர் இன்னும் 2 நாளில் தங்கள் கணவர் இறந்து விடுவார். கணவனின் இறப்பைத் தடுக்க வேண்டுமெனில் பரிகார பூஜை செய்ய வேண்டும். 

ரூ.4 ஆயிரத்து 500 வேண்டும்

எனவே உங்கள் கையில் உள்ள பணத்தைக் கொடுங்கள் என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் தன்னிடம் இருந்த ரூ.1,700-ஐ அவரிடம் கொடுத்துள்ளார். மேலும் அவர் இந்தத் தொகை பரிகார பூஜைக்கு போதாது, எனவே ரூ.4 ஆயிரத்து 500 வேண்டும் என்று கூறி உள்ளார். மேலும் அவர் பரிகார பூஜை செய்யா விட்டால் கணவர் 2 நாட்களில் இறந்து விடுவார் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. 
இதைக்கேட்ட மலர்மணி அழத்தொடங்கியுள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதுபற்றி மலர்மணியிடம் விசாரித்தனர். அப்போது ஜோசியம் பார்ப்பதாகக் கூறிய நபர் பொய் சொல்லி பணம் பறித்தது தெரிய வந்தது.

சிறைபிடிப்பு

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த ஜோதிடரை சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பெண்ணிடம் இருந்து வாங்கிய 1,700 ரூபாயை மீட்டு மலர்மணியிடம் கொடுத்தனர். பின்னர் அந்த இளைஞரை பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்து விடுவித்தனர். மேலும், ஜோசியக்காரர் சொன்ன பொய்யை நம்பி ஏமாந்த பெண்ணிடம், இதுபோன்று ஜோசியம் என்ற பெயரில் ஏமாற்றுபவர்கள் சொல்வதை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

மேலும் செய்திகள்