கூடலூரில் சீசன் தொடங்கியது: பலாப்பழங்கள் கொள்முதல் செய்யப்படுமா?
கூடலூரில் சீசன் தொடங்கியதால் பலா பழங்களை வனத்துறையினர் கொள்முதல் செய்வார்களா? என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் சீசன் தொடங்கியதால் பலா பழங்களை வனத்துறையினர் கொள்முதல் செய்வார்களா? என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.
பலாப்பழ சீசன் தொடக்கம்
நீலகிரி மாவட்டத்தில் குளுகுளு சீசன் களைகட்டியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பலாபழங்கள் சீசனும் தொடங்கியுள்ளது. கூடலூர் பகுதியில் பலாப் பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பலாப் பழங்கள் அறுவடை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பலாப்பழ சீசன் தொடங்கியதும் காட்டு யானைகள் ஊருக்குள் அதிகளவு வருவது வழக்கம். இக்காலகட்டத்தில் வனவிலங்கு- மனித மோதல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் பலாப்பழம் உள்ளிட்ட பழ வகை மரங்கள் நடவு செய்யப்படாததால், சீசன் காலங்களில் பழங்களை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது. இதை தடுக்க மழைக்காலம் தொடங்கும் சமயத்தில் முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் வனக் கோட்டத்தில் பலா மரங்கள் அதிகளவில் வனத்தில் நடவு செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கொள்முதல் செய்ய வேண்டும்
ஆனால் வனத்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. மாறாக காட்டுயானைகள் வருகையை தடுக்க விவசாய நிலங்களில் விளைந்துள்ள பலா காய்களை வனத்துறையினர் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கும் எந்த பலனும் கிடைப்பதில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு காண விவசாய நிலங்களில் விளைந்துள்ள பலா பழங்களை விவசாயிகளிடமிருந்து வனத்துறையினர் சீசன் காலங்களில் கொள்முதல் செய்ய வேண்டும். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் பலாபழங்களை கொண்டு சென்று காட்டு யானைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.