திருவாலாங்காடு அருகே அரசு நிலத்தில் மரங்கள் வெட்டி விற்பனை
திருவாலாங்காடு அருகே அரசு நிலத்தில் மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்ட பனைமரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருத்தணி,
திருவாலாங்காடு ஒன்றியம், வேணுகோபாலபுரம் ஊராட்சி உட்பட்ட பரேஸ்புரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 65). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 5 பனைமரங்களையும், இவரது நிலத்திற்கு அருகில் ஓடை கால்வாய் இருந்த அரசாங்கத்துக்கு சொந்தமான 3 பனை மரங்களையும் வெட்டியுள்ளார். பின்னர் சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து செங்கல் சூளை அமைக்க பனைமரங்களை வாங்க வந்தவர்களிடம் மரத்தை விற்பனை செய்துள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த அதே கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் திருவாலங்காடு வருவாய் ஆய்வாளர் நதியாவிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்தபோது பனை மரங்கள் லாரியில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது. இதையடுத்து லாரியில் இருந்த பனைமரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.