குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

குன்றத்தூர் முருகன் கோவிலில், கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-04-26 04:11 GMT
சென்னை,

கோவில்களில் ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் சுப்பிரமணியர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முருகன் கோவிலில் 15 ஆண்டுகள் ஆன நிலையில், இந்து சமய அறநிலையத்துறை ரூ.2 கோடி மதிப்பில் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜையை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இதில், கோவில் சன்னதிகள், கோபுரங்கள், கலசங்கள் மற்றும் கோவில் வளாகம் புதுப்பிக்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 20-ந் தேதி கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், கஜ பூஜையுடன் தொடங்கி நடந்து வந்தது.

நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னர் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சிவஞான பாலையா சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் ராஜகோபுரம், மூலவர் விமான கோபுர கலசங்கள், சன்னதிகளில் உள்ள கலசங்களுக்கும் பல்வேறு நதிகளில் இருந்து நீர் கொண்டுவரப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது கோவில் மண்டபங்கள், மலைப்பாதை மற்றும் கோவில் வளாகங்களில் திரண்டிருந்த திரளான பக்தர்கள், ‘கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீர், ‘ஸ்பிரே’ என்னும் கருவி மூலமும், டிரோன் மூலமும் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழா காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கோலாகலமாகவும், வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., தாம்பரம் மாநகராட்சி போலீஸ் கமிஷனர் எம்.ரவி, ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்கரசி, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், விழா குழு தலைவர் செந்தாமரை கண்ணன், உதவி ஆணையர் முத்துரெத்தினவேலு, நகரமன்ற தலைவர் சத்தியமூர்த்தி, வீடு கட்டும் கூட்டுறவு சங்க தலைவர் அலெக்சாண்டர், நகரமன்ற உறுப்பினர் ராஜா, விஜயகுமார் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்கள் தப்பிப்பதற்காக கோவில் படிக்கட்டுகளில் சிவப்பு நிற கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்ததோடு, ஆங்காங்கே கேன்களிலும் குடிநீர் வைக்கப்பட்டு இருந்தன.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூக்கள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனத்துக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஆங்காங்கே பெரிய அளவில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு அதில் கும்பாபிஷேக விழா ஒளிபரப்பு செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்