அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல்
அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டது.;
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல் துறையூர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் பொறுப்பாளர்களாக தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செல்வ மோகன்தாஸ் பாண்டியனும், கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யாவும் செயல்பட்டனர். இதில் மாவட்ட செயலாளர் பதவிக்கு தற்போதைய மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் விருப்ப மனுவினை தேர்தல் பொறுப்பாளரிடம் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து கட்சியினர் யாரும் போட்டியிடவில்லை. இதனால் அவர் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார். கட்சியின் மாவட்ட அவைத் தலைவர், பொருளாளர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட மொத்தம் 43 பேர் தேர்தல் பொறுப்பாளர்களிடம் தங்களது விருப்ப மனுவினை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.