அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவியின் கை, கால் முறிந்தது
அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவியின் கை, கால் முறிந்தது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் இருந்து செட்டிகுளம், நக்கசேலம் வழியாக திருச்சி மாவட்டம் துறையூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்ய கட்டணமில்லை என்பதால், வழக்கத்தை விட பெண்கள் அதிகமாக அந்த பஸ்சில் பயணம் செய்கின்றனர். மேலும் நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் அந்த பஸ்சில்தான் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையிலும் வழக்கம்போல் பாடாலூரில் இருந்து துறையூர் நோக்கி புறப்பட்ட அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பஸ்சின் முன் படிக்கட்டில் பள்ளி மாணவிகளும், பின் படிக்கட்டில் மாணவர்களும் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
நக்கசேலம் பஸ் நிறுத்தம் அருகே பஸ் வந்தபோது முன்படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த ஈச்சம்பட்டியை சேர்ந்த துரைசாமியின் மகளும், நக்கசேலம் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருபவருமான விஜயலட்சுமி (வயது 16) தவறி சாலையில் விழுந்தார்.
இதில் பஸ்சின் பின் சக்கரம் அவரது கை, காலில் ஏறி இறங்கியதில் விஜயலட்சுமி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவரும், கண்டக்டரும் தப்பி ஓடிவிட்டனர். இதனை கண்ட பஸ் பயணிகளும், கிராம மக்களும் விஜயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் மாணவியை கலெக்டரின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி நேரில் சென்று பார்வையிட்டு டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு உத்தவிட்டார். இந்த சம்பவம் மாணவ-மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியதோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளி நாட்களில் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் பள்ளி மாணவ-மாணவிகளும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.