நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்களை அகற்ற கோரிக்கை
நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது கலெக்டரிடம் இந்திய தொழிலாளர் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கொடுத்த மனுவில், பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதேபோல் குன்னம் தாலுகா பெரிய வெண்மணி கிராமத்தை சேர்ந்த வரதராஜன் கொடுத்த மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால் நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்கள், தனியார் நிறுவன கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் விடுக்கப்படுகிறது. எனவே நீர்நிலைகளில் அரசு, தனியார் நிறுவன கட்டிடங்களை அகற்றிவிட்டு, பொதுமக்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பொதுமக்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் முன்பு, அவர்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதியும், குடிநீர், மின் வசதியும் ஏற்படுத்தி கொடுத்து விட்டு அகற்ற வேண்டும். மேலும் பெரிய வெண்மணி உடையான் சாலை ஏரியை ஆக்கிரமித்து மின்சார வாரியம் கட்டி வரும் கட்டிடத்தை அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 251 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அந்த மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.