சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்கும் சீனிவாசப்பூர் மாம்பழ சந்தை

சர்வதேச அளவில் சீனிவாசப்பூர் மாம்பழ சந்தை புகழ்பெற்று விளங்குகிறது. இங்கிருந்து ஆண்டுக்கு 8 லட்சம் டன் மாம்பழஞ்கள் விற்பனையாகிறது.

Update: 2022-04-25 21:16 GMT
பெங்களூரு:

சீனிவாசப்பூர்

  கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லையில் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ளது சீனிவாசப்பூர். ‘பழங்களின் ராஜா’ என்றழைக்கப்படும் மாம்பழங்கள் இங்கு அதிகமாக விளைவிக்கப்படுகிறது. ஆசியாவிலேயே அதிக மாம்பழங்கள் விளைவிக்கும் பகுதியாக சீனிவாசப்பூர் விளங்குகிறது. சீனிவாசப்பூர் தாலுகா முழுவதும் மாம்பழம் தான் பிரதான சாகுபடியாக உள்ளது.

  சீனிவாசப்பூர் தாலுகாவில் மட்டும் 22,325 ஹெக்டேர் பரப்பளவில் மாம்பழங்கள் பயிரிடப்பட்டுள்ளன. கோலார் மாவட்டம் முழுவதும் மொத்தம் 45 ஆயிரம் ஹெக்டேரில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கிருந்து வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மாம்பழ சந்தை

  சீனிவாசப்பூரில் பெரிய அளவில் மாம்பழங்கள் சாகுபடி செய்து வந்தாலும், அவற்றை விற்பனை செய்ய போதிய இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இது அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து எஸ்.எம்.கிருஷ்ணா, சீனிவாசப்பூர் அருகே சோமயாஜாலபள்ளி கிராமத்தில் இருந்த கோசாலைக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தில் மாம்பழ சந்தை அமைக்க ஒதுக்கினார்.

  இதையடுத்து அங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மாம்பழ சந்தை தொடங்கப்பட்டது. அதன்பிறகு அந்த சந்தையில் மாம்பழ விற்பனைக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டன. இந்த சீனிவாசப்பூர் மாம்பழ சந்தை படிப்படியாக வளர்ந்து தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.

8 லட்சம் டன் மாம்பழங்கள்

  சீனிவாசப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரெயில் மூலமும், வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலமும் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தீவிர முயற்சி மேற்கொண்டார். அவர், அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் பேசி வெளிநாடுகளுக்கு சீனிவாசப்பூர் மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றுக் கொடுத்தார்.

  இதனால் தற்போது வெளிநாடுகளுக்கு டன் கணக்கில் தங்கு தடையின்றி மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சீனிவாசப்பூர் மாம்பழ சந்தைக்கு கோலார் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திராவில் இருந்தும் விற்பனைக்காக ஏராளமான விவசாயிகள் மாம்பழங்களை கொண்டு வருகிறார்கள். இங்கிருந்து ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 8 லட்சம் டன் மாம்பழங்கள் விற்பனையாகின்றன. மேலும் ஆண்டுக்கு 4 லட்சம் டன் மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மாம்பழ சீசன்

  ஆண்டு முழுவதும் மாம்பழங்கள், மாங்காய்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அதன் உச்ச பருவம் (சீசன்) ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை ஆகும். இந்த காலகட்டத்தில் சீனிவாசப்பூர் மாம்பழ சந்தை களைகட்டும். பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழங்கள், மாங்காய்களை வாங்கவும், விற்கவும் ஆயிரக்கணக்கானோர் குவிவார்கள். இதனால் மாம்பழங்களின் விற்பனையும் அமோகமாக இருக்கும்.

  இந்த ஆண்டும் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி விட்டது. இதனால் வியாபாரிகள் மாம்பழ விற்பனைக்கு தயாராகி விட்டனர். கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழையால் சீனிவாசப்பூர் உள்பட கோலார் மாவட்டத்தில் மாங்காய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் மாம்பழங்கள், மாங்காய்கள் குவிய தொடங்கி விட்டன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சீனிவாசப்பூர் மாம்பழ சந்தையில் மாம்பழங்களை விற்பனை செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எதிர்பார்த்த அளவுக்கு மாம்பழங்கள் விற்பனையாகவில்லை. தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாததால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்