சர்ச்சை பேச்சு வழக்கில் கைதான இந்து மகா சபா மாநில தலைவர் பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு
சர்ச்சை பேச்சு வழக்கில் கைதான இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியனை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
நாகர்கோவில்,
சர்ச்சை பேச்சு வழக்கில் கைதான இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியனை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
சர்ச்சை பேச்சு
புதுக்கடை அருகே உள்ள முள்ளுவிளை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பிற மதத்தை சேர்ந்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியதாக தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் புகார் அளித்தார்.
அதன்பேரில் த.பாலசுப்பிரமணியனை ஈத்தாமொழியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புதுக்கடை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிறையில் அடைப்பு
பின்னர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது உடல்நிலை சீராக உள்ளதையடுத்து, நேற்று த.பாலசுப்பிரமணியனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.
முன்னதாக சிறைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி வளாகத்தில் இந்து மகா சபா நிர்வாகிகள் ஏராளமானவர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.