பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.ஓகா விலகல்
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடா்பான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.ஓகா திடீரென்று விலகி இருக்கிறார்.;
பெங்களூரு:
மாநகராட்சி தேர்தல் வழக்கு
பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 198 வார்டுகளுக்கு பதிலாக 243 வார்டுகளாக உயர்த்த அரசு முடிவு செய்தது. இதனால் மாநகராட்சி தேர்தலை நடத்தாமல் அரசு தள்ளிவைத்தது. இதற்கிடையில், பெங்களூரு மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கர்நாடக ஐகோாட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை அப்போது கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ஏ.எஸ்.ஓகா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு கூறி இருந்தார்.
கர்நாடக ஐகோாட்டு தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அதன்படி, அந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விலகல்
இந்த நிலையில், அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உள்ள ஏ.எஸ்.ஓகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகி கொள்வதாக நீதிபதி ஏ.எஸ். ஓகா அறிவித்தார். ஏனெனில் பெங்களூரு மாநகராட்சி தேர்தலை 6 வாரங்களுக்குள் நடத்த வேண்டும் என்று தலைமை நீதிபதியாக இருந்த போது, தீர்ப்பு கூறி இருந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஏ.எஸ்.ஓகா இருந்து வருகிறாா்.
தான் ஏற்கனவே விசாரித்து தீர்ப்பு கூறி இருந்ததால், இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஏ.எஸ்.ஓகா விலகி இருக்கிறார். நீதிபதி விலகி இருப்பதால், இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை வேறு நீதிபதி அடங்கிய அமர்வுக்கு மாற்றப்படும். இதனால் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடைபெறுவது இன்னும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.