தலைமை ஆசிரியர் வீடு உள்பட 2 இடங்களில் 72 பவுன் நகை கொள்ளை

குளச்சல் அருகே தலைமை ஆசிரியர் வீடு உள்பட 2 வீடுகளில் 72 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2022-04-25 20:25 GMT
குளச்சல், 
குளச்சல் அருகே தலைமை ஆசிரியர் வீடு உள்பட 2 வீடுகளில் 72 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தலைமை ஆசிரியர்
குளச்சல் அருகே உள்ள கோணங்காடு, சிராயன்விளையை சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ் (வயது 55). இவர் தாழக்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மேரி. இவர் இரணியல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுடைய மகன் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று காலையில் மரியபிரான்சிஸ், அவருடைய மனைவி மேரி ஆகியோர் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். அவர்களது மகன் கல்லூரிக்கு சென்று விட்டார்.
கதவு பூட்டு உடைப்பு
இந்தநிலையில் மரிய பிரான்சிஸ் வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பகுதியில் உள்ள கதவின் பூட்டு உடைந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இ்ருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே சிதறிக் கிடந்தன. அதில் வைத்திருந்த பொருட்களை சரி பார்த்த போது, 43½ பவுன் நகைகளை காணவில்லை. மேலும் மேஜை டிராயரும் உடைந்து கிடந்தது. அதில் வைத்து இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கமும் மாயமாகி இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
72¼  பவுன் நகைகள்
இதே போல் கோணங்காடு சர்ச் தெருவில் உள்ள வீட்டிலும் கொள்ளை நடந்தது. அங்கு வசிப்பவர் அருள்தாஸ் (62). இவர் நாகர்கோவிலில் உள்ள வலை கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அமலோற்பவம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தட்டச்சராக பணிபுரிகிறார்.
இவர்கள் இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று மாலை இருவரும் வீட்டுக்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே அவர்கள்அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு பீரோவில் வைத்து இருந்த 28¾ பவுன் நகையை காணவில்லை. வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இரு வீடுகளிலும் சேர்த்து 72¼ பவுன் நகைகளும், ரூ.20 ஆயிரம் ரொக்கமும் கொள்ளை போனது. இதுபற்றி குளச்சல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 
போலீஸ் சூப்பிரண்டு
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் போலீசாரும் வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்