மதுரையில் கொரோனாவின் தற்போதைய நிலை என்ன?

மதுரையில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.

Update: 2022-04-25 20:07 GMT
மதுரை, 
மதுரையில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.
கொரோனா பாதிப்பு
கடந்த 2 ஆண்டுகளாக உலகையே முதல் அலை, 2-ம் அலை என அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தியதன் விளைவாகவே கொரோனா பாதிப்பு குறைந்ததாக மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், முககவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து முககவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
மதுரையில் கொரோனாவின் தற்போதைய நிலை என்ன, அதனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சிகிச்சையில் இல்லை
மதுரையில் நேற்றைய நிலவரப்படி யாரும் கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இல்லை. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2, 3 பேரும் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆயுதமாக இருக்கும் தடுப்பூசியை அனைவரும் செலுத்தும் வகையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது.மதுரையில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசி
நேற்று மாலை நிலவரப்படி, மதுரை மாவட்டத்தில் 86 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசியும், 60 சதவீத மக்கள் 2-ம் தவணை தடுப்பூசியையும் செலுத்தி இருக்கின்றனர். இதுபோல், பூஸ்டர் தடுப்பூசியை 42 ஆயிரம் பேர் செலுத்தி இருக்கிறார்கள். 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் யார், யார் என்பது குறித்து கணக்கெடுக்கும் பணிகள் ஒரு புறம் நடக்கிறது. அவர்களை தொடர்பு கொண்டு அவர் களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையும் மும்முரமாக நடக்கிறது. மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க, மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்