தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
குடிநீர் இணைப்பை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
குடிநீர் இணைப்பை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
அப்போது திருமலை சமுத்திரம் அருகே உள்ள மாதுரன் புதுக்கோட்டையை சேர்ந்த தொழிலாளி உதயகண்ணன் (வயது 32) என்பவர் மனு கொடுக்க காத்திருந்தார். அப்போது திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர்
இதனை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ஓடிச்சென்று பாட்டிலை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். முன்னதாக அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் வீட்டுக்கு ஊராட்சி மூலம் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. அந்த இணைப்பிலிருந்து எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவர் குடிநீர் இணைப்பு கேட்டார். அதன்படி நாங்கள் அனுமதி அளித்து 5 ஆண்டுகளாக குடிநீர் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் எங்களது வீட்டில் திருமண நிகழ்ச்சிக்காக கழிவறை வசதி வேண்டி குழி தோண்டும் போது எதிர்பாராதவிதமாக குழாய் உடைந்து விட்டது.
சேதப்படுத்தினர்
உடனே அந்த நபரிடம் வேறு வழியில் குடிநீர் அமைத்துக் கொள்ளுமாறு கூறினோம். பின்னர் ஊராட்சி மன்ற தலைவரிடமும் கூறினோம். இந்த நிலையில் அவர்கள் கட்சி பிரமுகர் ஒருவருடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அப்போது ஒரு வார காலத்திற்கு தண்ணீர் கொடுக்குமாறு, பின்னர் மாற்றுப்பாதையில் குடிநீர் இணைப்பு அமைத்துக் கொள்ளுமாறு சமாதானம் செய்தனர். ஆனால் மூன்று நாட்கள் தடையின்றி தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில், கம்பி வேலி அமைத்து எங்களது வீட்டு குடிநீர் குழாயை உடைத்து வீட்டை சேதப்படுத்தி உள்ளனர். பின்னர் போலீசாரிடம் புகார் மனு கொடுக்க சென்றபோது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
என் மீது வழக்குப்பதிவு செய்து என் வாழ்க்கையை சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.