டிரைவர் வெட்டிக்கொலை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், மகன் உள்பட 6 பேர் அதிரடி கைது

நெல்லை மார்க்கெட்டில் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், அவரது மகன் உள்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-04-25 19:27 GMT
நெல்லை:
நெல்லை மார்க்கெட்டில் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், அவரது மகன் உள்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 

டிரைவர் கொலை

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள சுப்பையாபுரம் பகுதியைச்் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 40). லோடு ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவில் நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் காய்கறி லோடு இறக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் திடீரென்று சசிகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றார்.

தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த சசிகுமாரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சசிகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இந்த நிலையில் சசிகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலையில் சுப்பையாபுரம் விலக்கு பகுதியில் நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். கொலையாளியை உடனே கைது செய்ய வேண்டும், சசிகுமாரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், சசிகுமாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுபற்றி அறிந்த நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், தாழையூத்து துணை சூப்பிரண்டு ஜெபராஜ், மானூர் இன்ஸ்பெக்டர் ராமர், தாசில்தார் சுப்பு மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவிலை நிர்வகிப்பதில் பிரச்சினை

இதற்கிடையே, சசிக்குமார் கொலையில் துப்பு துலக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவின்பேரில், நெல்லை சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் அண்ணாத்துரை தலைமையில், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சுப்பையாபுரம் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக சசிகுமார் தரப்புக்கும், நெல்லை மாநகரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஒருவரின் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் தரப்பினர் அந்த கோவிலை சுற்றிலும் கம்பிவேலி அமைத்தனர். இதையடுத்து இருதரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தரப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், சசிகுமார் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில்தான் சசிக்குமார் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

சப்-இன்ஸ்பெக்டர்-மகன் கைது

இந்த நிலையில் டிரைவர் கொலையில் நேற்று இரவு சுப்பையாபுரத்தை சேர்ந்த அழகுபாண்டியன் (57), அவருடைய மனைவி ராஜம்மாள் (52), மகன் பாலமுருகன் (29), திம்மராஜபுரம் காந்தி தெருவை சேர்ந்த சிதம்பரகுமார் (39), அவருடைய மனைவி அனிதா (36) மற்றும் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சங்கர் என்ற சங்கரநாராயணன் (24) ஆகிய 6 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் அழகுபாண்டியன் நெல்லை மாநகர போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்