மனு கொடுத்த சிறுவனுக்கு உடனடியாக மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய கலெக்டர்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்த சிறுவனுக்கு உடனடியாக மூன்று சக்கர சைக்கிளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்த சிறுவனுக்கு உடனடியாக மூன்று சக்கர சைக்கிளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 335 மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்களை விசாரணை செய்து அதன் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு 4 மாற்றுத்திறனாளிக்கு சமூக பாதுகாப்புதிட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.
மூன்று சக்கர சைக்கிள்
மேலும் கூட்டத்தில் பூதலூர் தாலுகா புதுக்குடி கிராமம் காமாட்சிபுரத்தை சேர்ந்த சிறுவன், மூன்று சக்கர சைக்கிள் கேட்டு விண்ணப்பித்தார். மனுவை பரிசீலித்த கலெக்டர் உடனடியாக மூன்று சக்கர சைக்கிளை கூட்டத்திலேயே வழங்கினார். இதையடுத்து அந்த சிறுவன் கலெக்டருக்கு நன்றி தெரிவித்து சைக்கிளை பெற்றுக்கொண்டான்.
இந்த கூட்டத்தில் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை கலெக்டர் ரேணுகாதேவி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.