பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேற்று தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 755 மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர்

Update: 2022-04-25 19:17 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேற்று தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 755 மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர்
செய்முறைத்தேர்வு
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 2 ஆண்டுகளாக பள்ளி வகுப்பறைகளையும் முறையாக திறக்கப்படவில்லை. பொதுத்தேர்வுகளும் முறையாக நடத்தப்படவில்லை. இந்த நிலையில் மாணவ, மாணவிகளுக்கு தற்போது வகுப்புகள் நடத்தப்பட்டு இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் செய்முறைத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது. தேர்வு காலையிலும், மாலையிலும் என 2 பிரிவாக நடத்தப்பட்டது.
பிளஸ்-2, பிளஸ்-1 மாணவர்கள்
நேற்று பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு வேதியியல் மற்றும் இயற்பியில் செய்முறைத்தேர்வு நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் இந்த செய்முறைத்தேர்வினை பிளஸ்-2 மாணவர்கள் 19 ஆயிரத்து 755 பேரும், பிளஸ்-1 மாணவர்கள் 21 ஆயிரத்து 672 பேரும் எழுதினர்.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த செய்முறைத்தேர்வினை பிளஸ்-2 மாணவர்கள் 185 பேர் எழுதினர். இதே போல் பிளஸ்-1 செய்முறைத்தேர்வினை 165 பேர் எழுதினர். தேர்வு பள்ளி தலைமை ஆசிரியர் வேலாயுதம் மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.
இதே போல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறைத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வினை 32 ஆயிரத்து 289 பேர் எழுதுகின்றனர்.

மேலும் செய்திகள்