அன்னவாசல் அருகே வயலோகத்தில் தொடர் மின்தடையை கண்டித்து நூதன போராட்டம்

அன்னவாசல் அருகே வயலோகத்தில் தொடர் மின் தடையை கண்டித்தும் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-25 19:12 GMT
அன்னவாசல்:
நூதன போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே அண்ணாபண்ணை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வயலோகம், வேளாம்பட்டி, முதலிப்பட்டி, நிலையபட்டி, மாங்குடி, அகரப்பட்டி, மாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. 
இதனால் பகல் நேரங்களில் பணி செய்ய முடியாமலும், இரவு நேரங்களில் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாகவும், தங்கள் பகுதியில் நிலவும் தொடர் மின்வெட்டை சரி செய்யாத மத்திய, மாநில அரசு நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நேற்று வயலோகத்தில் உள்ள அண்ணா பண்ணை துணை மின்நிலைய அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்களை எழுப்பினர் 
அப்போது அவர்கள் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிவாயு பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்தும், தமிழக அரசு தடையின்றி மின் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் மின் நிலைய அலுவலக வளாக சுவற்றில் தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
பேச்சுவார்த்தை 
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுடுகாட்டில் படுத்து உறங்குவதற்காக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த குடுமியான்மலை வருவாய் ஆய்வாளர் சுபா மற்றும் அண்ணாபண்ணை மின்வாரிய அலுவலர் அம்பிகாபதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது இனிவரும் காலங்களில் மின்தடை ஏற்படாத வண்ணம் சரி செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மின்வாரிய அலுவலகம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்