செம்பாட்டூர் ஊராட்சியில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை மாற்று பாதையில் நிறைவேற்ற கோரிக்கை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராமமக்கள் மனு
செம்பாட்டூர் ஊராட்சியில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை மாற்று பாதையில் நிறைவேற்ற கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராமமக்கள் மனு அளித்தனர்.;
புதுக்கோட்டை:
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் புதுக்கோட்டை செம்பாட்டூர் ஊராட்சி நரங்கியன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், ‘‘செம்பாட்டூர் ஊராட்சியில் குடிநீர் ஊரணி ஒன்று உள்ளது. இந்த ஊரணி சுற்றுவட்டார பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு விளங்கி வருகிறது.
இந்த நிலையில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை இந்த ஊரணி வழியாக செயல்படுத்த நிலம் கையகப்படுத்த உள்ளனர். இதனை தவிர்த்து மாற்று பாதையில் அருகில் அரசுக்கு தேவையான இடம் இருப்பதால் அதனை அரசு மறு ஆய்வு செய்து பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
337 மனுக்கள்
இதேபோல பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்ப்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறையின் அரசு மாணவ-மாணவிகள் விடுதியில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகிறவர்கள் தங்களை முழு நேர ஊழியர்களாக அறிவித்து, சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரியும் மனு அளித்தனர்.
இதேபோல பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மொத்தம் 337 மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கு காசோலை
கூட்டத்தில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 130 மதிப்பீட்டில் அரசு மானியத்திற்கான காசோலையையும், நீரில் மூழ்கி இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் கலெக்டர் கவிதாராமு வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.