நூலகத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு புத்தகங்கள்
சிவகங்கை நகராட்சி நூலகத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை நகராட்சி சார்பில் நகராட்சி அலுவலகத்தில் புதிதாக நூலகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்திற்கு நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து ரூ.1 லட்சத்திற்கு புத்தகம் வாங்கி நன்கொடையாக கொடுத்துள்ளனர்.
மேலும் காங்கிரஸ் கட்சி டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் ஜெயசிம்மா நாச்சியப்பன் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை நகராட்சி நூலகத்திற்கு வழங்கினார். இந்த புத்தகங்களை நகரசபை தலைவர் துரை ஆனந்த், ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் கார் கண்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், வட்டார தலைவர் சோனைமுத்து, நகர தலைவர் பிரபாகரன், எஸ்.சி. எஸ்.டி. பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தா ராணி, நகர்மன்ற உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, விஜயகுமார், மகேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.