கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் கல்வி அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் கல்வி அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கிருஷ்ணகிரி:
கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அரசு தொடக்கப்பள்ளி
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் மோரமடுகு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சோக்காடி, பாரதிநகர், காந்திநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 75 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகிய 2 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் விடுமுறையில் இருந்தார். உதவி ஆசிரியை மட்டும் பணியில் இருந்தார். இதனால் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமராமல், பள்ளியின் வெளியே விளையாடி கொண்டிருந்தனர். இதனை கண்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், செல்வராஜ் ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவ, மாணவிகளுக்கு சரியாக கல்வி கற்று கொடுப்பதில்லை. மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதால், கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். உதவி ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது உதவி ஆசிரியையை வேறு பள்ளி இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வேறு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் மாற்றுப்பணியாக இப்பள்ளிக்கு நியமிக்கப்படும். மாணவ, மாணவிகளின் கல்வி தரம் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறினார்கள். இதில் சமாதானம் அடைந்து பெற்றோர் கலைந்து சென்றனர்.