குடிநீர்கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர்கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை,
மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள திடீர் நகர், மேலவாசல் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வருவதில்லை. எனவே அந்த பகுதி மக்கள் குடிநீர் கேட்டு மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தங்கள் பகுதிக்கு குடிநீர்வசதி செய்து தர வேண்டி அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பெரியார் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய பஸ்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. மேலும் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களிடம் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். மேலும் இதேபகுதி மக்கள் கடந்த வாரமும் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டுஉள்ளனர்.