கரூரில் கொரோனா பரவலை தடுக்க நிறுவனங்கள், கடைகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

கரூரில் கொரோனா பரவலை தடுக்க நிறுவனங்கள், கடைகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-04-25 19:02 GMT
கரூர்
கரூர், 
விழிப்புணர்வு கூட்டம்
கரூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 
கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கி உள்ளதால், அதனை தடுக்கும் வகையில் முன்பு கடைப்பிடித்த கொரோனா வழிக்காட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தங்களது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை முக கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும். கடைகளின் முன்பு சானிடைசர் வைத்து கைகளை சுத்தம் செய்த பின்னரே வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.  சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கடைகளில் சிறிய ஒலிப்பெருக்கி வைத்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவிப்பு செய்ய வேண்டும்.
தடுப்பூசி
மேலும் கடைகள், நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். 2-வது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதுமான தடுப்பூசி உள்ளது. மேலும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுக்க நிறுவனங்கள், கடைகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா தொற்று இல்லாத கரூரை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் வணிகர்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், தியேட்டர்கள், டெக்ஸ்டைல்ஸ், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்