நிலம் தானம் குறித்த கல்வெட்டு கண்டெடுப்பு

மானாமதுரை அருகே நிலம் தானம் குறித்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-04-25 18:58 GMT
சிவகங்கை,

மானாமதுரை அருகே நிலம் தானம் குறித்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

ஓவியத்துடன் கூடிய கல்

 மானாமதுரை அருகே காளத்தியேந்தல் கிராமத்தில் கண்மாய் கரை ஓரமாக ஓவியத்துடன் ஒரு கல் கிடந்தது. இதை பார்த்த காளத்தியேந்தலை சேர்ந்த சமயக்குமார் ெகாடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகிேயார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த கல் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரிந்தது.
இது பற்றி அவர்கள் கூறியதாவது:-
இந்த கல்வெட்டானது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரி ஓவியத்துடன் காணப்படுகின்றது. பெரும் பகுதி சிதிலமடைந்த நிலையில் உள்ள அந்த கல் மூன்று அடி உயரம் உள்ளது. மேல் பகுதியில் திருமாலின் வாமன அவதார குறியீடுகளான குடையும் கமண்டலமும் ஒரு சங்கும் கோட்டோவியமாக இடம்பெற்றுள்ளன, மற்றும் சந்திரனின் பிறை வடிவமும் சூரியனும் வரையப்பட்டுள்ளது இதன் அர்த்தம் சந்திரன், சூரியன் உள்ளவரை இந்த தானம் செல்லும் என்பதே.

நிலம் தானம்

கீழ் பகுதியில் ஆறு வரிகள் கொண்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.முதல் வரியில் அழகர்சாமி என்றும் 3-வது வரியில் வாணாதிராயன் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த கல்வெட்டில் எழுதப்பட்டிருக்கும் வாணாதிராயன் என்பவர் மானாமதுரை பகுதியை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னராவார். அவரது ஆணையின்படி அழகர்சாமி என்பவர் இப்பகுதியில் இருந்த திருமால் கோவிலுக்கு நிலங்களை தானமாக தந்ததன் நினைவாக இக்கல்வெட்டை பதிவு செய்திருக்கலாம். இந்த கல்லானது ஒரு கல்வெட்டாக மட்டுமல்லாமல் எல்லை கல்லாகவும் பயன்பட்டிருக்கிறது என்பதை அறியலாம்.
இப்பகுதி மக்கள் இந்த கல்வெட்டுடன் கூடிய கோட்டோவியத்தை தொட்டிக்கல் முனி என்று கூறி வணங்கி வருகின்றனர். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்