கல்குவாரியில் லாரி மீது ராட்சத பாறை விழுந்து டிரைவர் உடல் நசுங்கி பலி

க.பரமத்தி அருகே கல்குவாரியில் ராட்சத பாறை லாரி மீது விழுந்து டிரைவர் உடல் நசுங்கி பலியானார். இதையடுத்து நிவாரணம் வழங்ககோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-25 18:16 GMT
கரூர்
க.பரமத்தி, 
ராட்சத பாறை லாரி மீது விழுந்தது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பாப்பையன்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 45). இவர் க.பரமத்தி அருகே உள்ள குப்பம் ஊராட்சி, காங்கேயம் பாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் டிப்பர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதே கல்குவாரியில் கார்த்திக் (26), நிர்மல்ராஜ் (22) ஆகியோர் பொக்லைன் எந்திர ஆபரேட்டர்களாக வேலை பார்த்து வருகின்றனர். 
 இந்தநிலையில் இரவு சுமார் 200 அடி ஆழமுள்ள கல்குவாரியின் அடிப்பகுதியில் இருந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் கார்த்திக், நிர்மல்ராஜ் ஆகியோர் டிப்பர் லாரியில் கருங்கற்களை ஏற்றி விட்டனர். டிப்பர் லாரியை சுப்பையா ஓட்டிக்கொண்டு மேட்டு பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்தார். சுமார் 100 அடி ஆழத்தில் பாதி வழியில் வந்தபோது ராட்சத பாறை ஒன்று உருண்டு டிப்பர் லாரி மீது விழுந்தது. இதில் டிப்பர் லாரி உருத்தெரியாமல் நசுங்கியது. அப்போது லாரியில் டீசல் டேங்கு வெடித்து லாரி தீப்பற்றி எரிந்தது. 
மீட்பு பணியில் தொய்வு
இதனையடுத்து குவாரியில் வேலை செய்யும் பணியாளர்கள் க.பரமத்தி போலீசாருக்கும், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் போதிய வெளிச்சம் இல்லாததாலும், பாறைகள் சரிந்து விழுந்து விடும் என்ற பயத்தாலும் இரவில் மீட்பு பணிகளை நிறுத்தி வைத்தனர். பின்னர் காலை மீண்டும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தான் 200 அடி ஆழத்தில் தரைப்பகுதியில் பொக்லைன் ஆபரேட்டர்கள் கார்த்திக், நிர்மல்ராஜ் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து அவர்களுக்கு கயிறு மூலம் காலை உணவு அளிக்கப்பட்டது. நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி சுமார் 200 அடி பள்ளத்தில் இறங்கி பொக்லைன் ஆபரேட்டர்கள் இருவரையும் மீட்டு மேலே கொண்டு வந்து சேர்த்தனர்.  இதற்கிடையே பாறை விழுந்ததில் டிப்பர் லாரி டிரைவர் சுப்பையா உடல் நசுங்கி இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ராட்சத பாறைகளை வெடிவைத்து சிறு கற்களாக உடைத்தனர்.
உறவினர்கள் போராட்டம்
அதன்பிறகு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கற்களை அப்புறப்படுத்தி சுப்பையாவின் உடலை மீட்டனர். அப்போது சுப்பையாவின் உடல் கருகிய நிலையில் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. சுப்பையாவின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மேலே கொண்டு வந்தனர். அப்போது மனைவி மற்றும் உறவினர்கள் எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். 
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்ச் செல்வன், க.பரமத்தி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், புகழூர் தாசில்தார் மதிவாணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கல்குவாரி உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணத்தொகை வழங்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் உறவினர்கள் கலைந்து சென்றனர். பின்னர் சுப்பையாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்