வார்டு கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றியதால் பரபரப்பு
ஆரணி நகர தி.மு.க. உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், வட்ட பொறுப்பு கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் திடீரென வார்டு கவுன்சிலர் மீது பெட்ரோலை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி
ஆரணி நகர தி.மு.க. உள்கட்சி தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில், வட்ட பொறுப்பு கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் திடீரென வார்டு கவுன்சிலர் மீது பெட்ரோலை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்கட்சி தேர்தல்
தமிழகம் முழுவதும் தி.மு.க. நகர வார்டு நிர்வாகிகளுக்கும், பேரூராட்சி வார்டு பொறுப்பாளர்களுக்கும் உள்கட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன்படி ஆரணி நகரில் 33 வார்டுகள் உள்ளன. 33 வார்டுகளுக்கும் கடந்த நகரமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு வார்டுக்கும் தேர்தல் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையிலும் உள்கட்சி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆரணி நகரில் கொசப்பாளையம் பகுதியில் 30-வது வார்டுக்கு உட்பட்ட தி.மு.க. வட்ட நிர்வாகிகள் தேர்வு செய்ய தேர்தல் பொறுப்பாளராக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஜிவெங்கடேசன் நியமிக்கப்பட்டு இருந்தார்.
நேற்று இரவு 7 மணி அளவில் கொசப்பாளையம் பகுதியில் தி.மு.க. வட்ட (வார்டு) நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த வார்டில் வட்ட செயலாளராக இருந்த பாலா என்பவர் ஏற்கனவே இறந்து விட்டதால், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்து ஆலோசிக்கப்பட்டது.
பெட்ேரால் ஊற்றியதால் பரபரப்பு
அப்போது கூட்டத்தில் ஞானவேலுவின் மகன் அன்புமணி (வயது 30) எழுந்து, எனக்கு வார்டு செயலாளர் பொறுப்பு கொடுங்கள், எனக்கேட்டு ஆவேசமாகப் பேசினார். அதற்கு பதில் அளித்த 30-வது வார்டு நகரசபை உறுப்பினர் கார்த்தி, கடந்த முறை உங்கள் தாயாருக்கு வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
தற்போது நீயும் வார்டு செயலாளர் பொறுப்பு கேட்டால் எப்படி? எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே அன்புமணி தான் தயாராகப் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும், அங்குப் பேசிக்கொண்டிருந்த நகரசபை உறுப்பினர் கார்த்தி மீதும் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து பெட்ேரால் பாட்டிலைப் பிடுங்கி தூர வீசியெறிந்து விட்டு, அவர்களை சமரசம் செய்தனர்.
இதையடுத்து கார்த்தி ஆரணி டவுன் போலீசில் அன்புமணி மீது புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை செய்வதாகப் பேசி அனுப்பி வைத்தார்.
மேலும் ஆரணி நகரில் 19-வது வார்டிலும் உட்கட்சி தேர்தலில் தி.மு.க. நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு ஆரணி அரசு மருத்துவமனையில் 4 பேர் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரிலும் ஆரணி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.