10 ம் வகுப்பு மாணவியுடன் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை
திருப்பூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 10-ம் வகுப்பு மாணவியுடன் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 10-ம் வகுப்பு மாணவியுடன் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிணற்றில் பெண் பிணம்
திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு ஆத்துப்பாளையம் ரோட்டில் கிருஷ்ண வீணாநகர் அருகில் தனியாருக்கு சொந்தமான ஒரு கிணற்றில் நேற்று காலை ஒரு இளம்பெண் பிணமாக மிதந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் செட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி ரவிக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்புதுறையினர் உதவியுடன் கிணற்றில் மிதந்த இளம்பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆண் பிணம் மீட்பு
இந்த நிலையில் கிணற்றில் இளம்பெண்ணின் காலணிகளுடன், மற்றொரு ஜோடி காலணியும் மிதந்தது. மேலும் கிணற்றின் அருகில் மோட்டார்சைக்கிள் ஒன்றும் கேட்பாரற்று நின்றது. எனவே அந்த பெண்ணுடன் சேர்ந்து ஆண் யாராவது உள்ளே குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் தீயணைப்புத்துறையினரின் தேடுதலில் ஒரு ஆண் பிணம் சிக்கியது. அப்போது அந்த வாலிபரின் பேண்ட் பாக்கெட்டில் ஒரு செல்போன் இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த செல்போனில் இருந்த சிம்கார்டு மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் பதிவு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தினர்.
அடையாளம் தெரிந்தது
இதில் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர் திருப்பூரை அடுத்த அவினாசி கைகாட்டிபுதூர் பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகன் அஜய் (வயது 23) என்பது தெரியவந்தது. அஜயும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மகளான ஹர்ஷினியும் (15) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஹர்ஷினி அவினாசியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் இருவரது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததையடுத்து 2 பேரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், காதல் ஜோடியை கடுமையாக எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஹர்ஷினி அஜயின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார். அதில், வீட்டில் பெற்றோர் திட்டுவதால் வாழவே பிடிக்கவில்லை என்றும், வந்து என்னை அழைத்து சென்றுவிடு என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அஜய் ஹர்ஷினியை வீட்டில் இருந்து அழைத்து சென்று விட்டார்.
தற்கொலை குறித்து குறுஞ்செய்தி
நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹர்ஷினி மற்றும் அஜய்யின் உடல்களை பார்த்து இரு குடும்பத்தினரும் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
திருப்பூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.