எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்த கூடாது தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 7 மாவட்ட விவசாயிகள் மனு

எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்த கூடாது என்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 7 மாவட்ட விவசாயிகள் மனு கொடுத்தனர்.

Update: 2022-04-25 17:33 GMT
தர்மபுரி:
எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்ட விவசாயிகள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டப்பணியை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 12 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்த திட்டத்தை சாலையோர பகுதி வழியாக செயல்படுத்த வலியுறுத்தி கடந்த 2013-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அதிகாரிகள் நில அளவீடு செய்ய சென்றதால் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கரியப்பன அள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் தற்கொலை செய்து கொண்டார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை நெடுஞ்சாலை வழியாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்த விவசாயி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கிறோம். எரிவாயு குழாய் பதிக்கும் நிறுவனம் விவசாயி கணேசன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்