தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு 4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு 4 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு 4 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர்.
தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நுழைவுவாயில் பகுதியில் ஒரு பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தடுத்து நிறுத்தினார்கள்.
இது தொடர்பான விசாரணையில் அவர் நாகர்கூடல் பகுதியை சேர்ந்த நாகவேணி (வயது 48) என தெரியவந்தது. அவருடைய நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
இதேபோல் தர்மபுரி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே மேலும் 3 பெண்கள் தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கோட்டப்பட்டி அருகே மோட்டூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மருமகள் என தெரியவந்தது.
இவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் வீடு கட்ட முயன்றபோது சிலர் தடுத்து நிறுத்தி தகராறு செய்வதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரி தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு 4 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.