பஸ் டிரைவர்களுக்கிடையே தகராறு; 6 பேர் மீது வழக்கு

பஸ் டிரைவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-25 17:13 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எண் 3-ல் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் அரகண்டநல்லூரில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்சை ஓட்டிச்சென்றார். 


அப்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற தனியார் பஸ் ஒன்று வடகரைத்தாழனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆயந்தூர் பஸ் நிறுத்தம் வரை அரசு பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அரசு பஸ் டிரைவர் ரமேஷ், அந்த தனியார் பஸ் கண்டக்டரான திருக்கோவிலூர் அருகே பூவாரி பகுதியை சேர்ந்த அருள் (42) என்பவரிடம் கேட்டார். 

அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ரமேசை அருள், தனியார் பஸ்  டிரைவர்  ஜெயக்குமார் மற்றும் 2 பேர் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். 

இதுகுறித்து ரமேஷ், காணை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் அருள், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இதேபோல் அருள், காணை போலீஸ் நிலையத்தில் மற்றொரு புகார் செய்தார். அந்த புகாரில் தன்னை ரமேஷ், இருசப்பன் ஆகியோர் தாக்கியதாக கூறியிருந்தார். அதன்பேரில் ரமேஷ், இருசப்பன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்