பத்திரகாளி அம்மன் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையன்
இரணியல் அருகே பத்திரகாளி அம்மன் கோவிலில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே பத்திரகாளி அம்மன் கோவிலில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பத்திரகாளி அம்மன் கோவில்
இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோட்டில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை-மாலை என இருவேளையும் பூஜைகள் நடைபெறும். பவுர்ணமி தினத்தன்று இந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் வழக்கம்போல் கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது, கோவில் வளாகத்தில் வைத்திருந்த உண்டியல் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி ஊர் தலைவர் வேலுதாசுக்கு தகவல் தெரிவித்தார்.
உண்டியல் உடைப்பு
அதைத்தொடர்ந்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிலில் மாயமான உண்டியல் எங்கே என்று தேடிய போது, அது கோவிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு புதரில் திறந்த நிலையில் கிடந்தது.
உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையன் அதை உடைத்து பணத்தை கொள்ளையடித்து கொண்டு, உண்டியலை புதரில் வீசிச் சென்றது தெரியவந்தது.
விசாரணை
அதைத்தொடர்ந்து போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அப்போது, அதில், ஒரு மர்ம நபர் கோவிலுக்குள் வந்து உண்டியலை அப்படியே தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.