‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-25 17:10 GMT
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் 

பழனி ராமநாதன்நகரில் நடைபயிற்சி செய்பவர்களுக்காக அப்பகுதியில் சாலையோரத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட இடங்களில் ஆங்காங்கே மரக்கன்றுகள் நடப்பட்டன. அப்போது மரக்கன்று நட்ட இடத்தில் பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கற்களை அகற்றி சாலையோரத்திலேயே போட்டுச்சென்றுவிட்டனர். இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரி, பழனி.

தோட்டத்தில் பதுங்கும் பாம்புகள்

குஜிலியம்பாறை தாலுகா மல்லபுரம் ஊராட்சி தாதநாயக்கனூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் விஷ பாம்புகள் அதிகம் உள்ளன. இதனால் தோட்டத்துக்கு செல்லவே தொழிலாளர்கள், விவசாயிகள் அச்சப்படுகின்றனர். எனவே பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேந்திரன், தாதநாயக்கனூர்.

நெல் கொள்முதல் நிலையம் வேண்டும்

தொப்பம்பட்டி ஒன்றியம் மானூரில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வெளி சந்தையில் நெல்லுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. எனவே மானூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அறிவாசன், மானூர்.

சிக்னல் அமைக்கப்படுமா?

பழனி ரெணகாளியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் சிக்னல் வசதி இல்லை. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சிக்னல் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆனந்த், பழனி.

மேலும் செய்திகள்