நடைபயிற்சி சென்ற தொழில் அதிபர் காரில் கடத்தல்

வத்தலக்குண்டுவில், நடைபயிற்சி சென்ற ஓட்டல் அதிபர் காரில் கடத்தப்பட்டார். இது தொடர்பாக அரசு ஒப்பந்ததாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-25 16:59 GMT
வத்தலக்குண்டு:

 தொழில் அதிபர் கடத்தல்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு புதுப்பட்டி சாலையை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 55). தொழில் அதிபர். இவர் வத்தலக்குண்டுவில் பெரியகுளம் சாலையில் பயணியர் விடுதி எதிரே மூன்று நட்சத்திர ஓட்டல் நடத்தி வந்தார்.

இவர் தினமும் காலையில் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் கணவாய்ப்பட்டி பிரிவு அருகே நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி  அவர் நடைபயிற்சி மேற்கொண்டார். 

அப்போது அவரை வழிமறித்து வெள்ளை நிற கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து திபு, திபுவென 7 பேர் இறங்கினர். பின்னர் அவர்கள், நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அன்புச்செல்வனை குண்டு கட்டாக தூக்கி காரில் போட்டனர். மின்னல் வேகத்தில், அந்த கார் அங்கிருந்து மதுரை நோக்கி சென்றது. 

 போலீசில் புகார் 

இந்தநிலையில் நடைபயிற்சிக்கு சென்ற அன்புச்செல்வன், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய செல்போனில் குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர். ஆனால் அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. எனவே அவருடைய குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவரது மகன் ஜெய் கிஷோர், தனது தந்தையை தேடி அவர் வழக்கமாக நடைபயிற்சி மேற்கொள்ளும் கணவாய்ப்பட்டி பிரிவுக்கு சென்றார். அப்போது அங்கு தனது தந்தையின் ஒற்றைக்கால் செருப்பு மட்டும் கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். 

இது தொடர்பாக அக்கம்பக்கத்தினரிடம் அவர் விசாரித்தார். அப்போது, அன்புச்செல்வனை காரில் வந்த ஒரு கும்பல் கடத்தி சென்றதாக தெரிவித்தனர். இதனால் பதறிப்போன ஜெய் கிஷோர், வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கொடுக்கல்-வாங்கல் தகராறு

அந்த புகாரில், தனது தந்தைக்கும், சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அருள்நாயகத்துக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் தகராறு இருந்தது. இதனால் அவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

புகாரைப்பெற்ற போலீசார் உடனடியாக களத்தில் இறங்கினர். கடத்தல் கும்பலை பிடிக்க நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் மேற்பார்வையில், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேக் அப்துல்லா, தயாநிதி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

 சிவகங்கை
தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். குறிப்பாக அன்புச்செல்வனின் செல்போன் செயல்பாட்டை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பறையன்குளம் கண்மாய் அருகே அவரது செல்போன் செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். அப்பகுதியில் உள்ள மணி என்பவரின் வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அன்புச்செல்வனை போலீசார் மீட்டனர். 

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கொடுக்கல்-வாங்கல் தகராறில் அன்புச்செழியனை, அருள்நாயகத்தின் ஆதரவாளர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.

 கூலிப்படையினர் கைது 

இதனையடுத்து அன்புச்செல்வனை கடத்தி சென்ற அருள்நாயகத்தின் ஆதரவாளர்களான வத்தலக்குண்டுவை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் வெள்ளைச்சாமி (46), வத்தலக்குண்டு தெற்குதெருவை சேர்ந்த சிவா (30) மற்றும் கூலிப்படையினரான மதுரை பேரையூர் கொட்டானிபட்டியை சேர்ந்த வடிவேல் (32), மதுரை பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த பாலமுருகன் (36), விருதுநகர் வடமலைக்குறிச்சியை சேர்ந்த விஜய் (23), விருதுநகர் கலைஞர் நகர் போலீஸ் பாலம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (35), சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த பறையன்குளத்தை சேர்ந்த மணி (41) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

இதற்கிடையே கடத்தல் கும்பலை ‘பொறி’ வைத்து பிடித்து, தொழில் அதிபர் அன்புச்செல்வனை மீட்ட தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டி பரிசுகளை வழங்கினார். 

தொழில் அதிபர் காரில் கடத்தப்பட்ட சம்பவம், வத்தலக்குண்டுவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்