விழுப்புரம் அருகே பல்லவர்கால மூத்ததேவி, லகுலீசர் சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகே பல்லவர் கால மூத்ததேவி மற்றும் லகுலீசர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Update: 2022-04-25 16:57 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ளது நன்னாடு கிராமம். இக்கிராமத்தில் விழுப்புரம் வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மூத்ததேவி, லகுலீசர் சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

நன்னாடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலப்பகுதியில் முனீஸ்வரன் என்ற சிற்பம் ஒன்று வணங்கப்பட்டு வருகிறது. பாதிக்கும்மேல் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இந்த சிற்பம் காணப்பட்டது. 

இதன் முன் இருந்து மண்ணை அகற்றினோம். அப்போது வடமொழியில் ஜேஷ்டா என்று அழைக்கப்படும் மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது. பலகைக்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில் தனது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோருடன் அமர்ந்த நிலையில் அழகுற காட்சி அளிக்கிறார்.

 காக்கை கொடியும் காட்டப்பட்டுள்ளது. மூத்ததேவி சிற்பத்தின் இடதுபுறத்தின் கீழே செல்வக்குடம் காட்டப்பட்டுள்ளது. அதன் மீது தனது இடது கையை தேவி வைத்திருக்கிறார்.


பல்லவர் காலத்தை சேர்ந்தது

இந்த சிற்பம் பல்லவர் காலத்தை சேர்ந்தது, 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இதுநாள் வரை கிராம மக்கள் இந்த சிற்பத்தை ஆண் தெய்வமாக முனீஸ்வரன் என்று வணங்கி வந்தனர். ஆனால் இது பெண் தெய்வம் என்பதை அவர்களுக்கு எடுத்துச்சொல்லி இருக்கிறோம்.

 இக்கிராமத்தின் மற்றொரு பகுதியில் ஒரு சிற்பம் கண்டறியப்பட்டது. பலகைக்கல்லில் வடிவமைக்கப்பட்ட அந்த சிற்பத்தில் இடம்பெற்றிருப்பவர் லகுலீசர் ஆவார். இவரும் பல்லவர் காலத்தை சேர்ந்தவர். 

இதனை உறுதிப்படுத்தியுள்ள கல்வெட்டு ஆய்வாளர்கள் வீரராகவன், மங்கையர்கரசி ஆகியோர் விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு, கண்டமானடி கிராமங்களில் உள்ள லகுலீசர் சிற்பங்களை நன்னாடு சிற்பம் ஒத்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். 

லகுலீசர் பாசுபத சைவத்தின் தோற்றுநர் ஆவார். இவரது சிற்பங்கள் விழுப்புரம் மாவட்டத்தின் பல இடங்களில் கண்டறியப்பட்டு இருக்கின்றன. நன்னாடு கிராமத்தில் பல்லவர் காலத்து மும்மூர்த்திகள், சோமாஸ்கந்தர் உள்ளிட்ட சிற்பங்களும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. தற்போதும் பல்லவர்காலச் சிற்பங்கள் கண்டறியப்பட்டு இருப்பது, இந்த கிராமம் வரலாற்றுத்தடயங்கள் நிறைந்த கிராமம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.


 ஆயிரம் ஆண்டுகளை கடந்த இந்த சிற்பங்களை இப்பகுதி மக்கள் இன்றளவும் வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர். அப்போது நன்னாடு முக்கியஸ்தர்கள் மற்றும் விழுப்புரம் கரிகாலசோழன் பசுமை மீட்புப்படை ஒருங்கிணைப்பாளர்கள் அகிலன், பாபு, அய்யப்பன், விழுப்புரம் வரலாறு பண்பாட்டுப்பேரவை கண.சரவணக்குமார், விஷ்ணுபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்