நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம்
மாற்று இடம் வழங்காமல் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றுவதை நிறுத்தக்கோரி நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய 180 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
மாற்று இடம் வழங்காமல் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றுவதை நிறுத்தக்கோரி நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய 180 பேர் கைது செய்யப்பட்டனர்.
உண்ணாவிரத போராட்டம்
குமரி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி குளக்கரை, நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
மாற்று இடம் வழங்காமல் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் என்ற பெயரில் ஏழை மக்களின் வீடுகள் இடிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நிலம் எங்கள் உரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அனுமதி இல்லை
போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமை தாங்கினார். இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், நிர்வாகி சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பகலவன், பாபு மற்றும் திருப்பதிசாரம், தேரேகால் புதூர், கீழ தத்தையார் குளம், தத்தையார் குளம், தாழக்குடி மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொது மக்கள் தரப்பில் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், பணக்காரர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலங்களை மீட்காமல், வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழை மக்களின் வீடுகளை மட்டும் இடித்து அகற்றுவது நியாயமா என்று கூறினர்.
கண்ணீர் மல்க கோரிக்கை
மேலும் அரசு சட்டத்தின் படி புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க வழிவகை இருந்தும் அதிகாரிகள் அதை செய்வதில்லை என குற்றம் சாட்டினர். எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிலர் கண்ணீர் மல்க போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.
அப்போது அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது எனவும் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் பொது மக்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை குண்டுக்கட்டாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
180 போ் கைது
மேலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் உள்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என 180 பேரை போலீசார் கைது செய்தனர். அவா்களையும் அதே திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.