வாலிபருக்கு கத்திக்குத்து
கருப்பம்புலத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் நடுகாடு பகுதியை சேர்ந்தவர் அருள்சக்திவேல் (வயது35). இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் கோவிந்தராஜன் (32). இருவரும் நண்பர்கள். அருள்சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளை வெங்கடாசலம் வீட்டு வாசலில் இடையூறாக நிறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை கூறியும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து வெங்கடாசலம் கோவிந்தராஜனிடம் தெரிவித்து உனது நண்பர் அருள்சக்திவேலுவிடம் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இதை கோவிந்தராஜன் அருள்சக்திவேலிடம் தெரிவித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜன் தான் வைத்திருந்த கத்தியால் அருள்சக்திவேலை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், கார்த்திகேயன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜனை கைது செய்தனர்.