கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்கள்
கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த 2 பெண்கள் போலீஸ் சோதனையில் சிக்கினர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு விருத்தாசலம் அருகே புதுப்பேட்டை ஆலடி ரோட்டை சேர்ந்த சல்மா என்பவர் கையில் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தார்.
நுழைவு வாயிலில் போலீஸ் சோதனையின்போது சல்மாவிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி, விசாரித்தனர். விசாரணையில், அவர் கடந்த 12 ஆண்டுகளாக தனக்கு சொந்தமான நிலத்தை பக்கத்து நிலத்துகாரர் பயிர் செய்து வருவதாகவும், இது பற்றி தாலுகா, போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தும், கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்வதற்காக வந்தேன் என்றார்.
இதையடுத்து அவரை போலீசார் சமாதானம் செய்து, மீண்டும் கலெக்டரிடம் மனு அளிக்க செய்தனர். அதன்படி அவர் மனு அளித்து விட்டு சென்றார்.
வீட்டுக்கு வழி
இதேபோல் நடுவீரப்பட்டு அருகே வெள்ளக்கரையை சேர்ந்த வெங்கடாசலம் மனைவி ஜெயா (வயது 50) என்பவர் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தார். அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை போலீசார் பிடுங்கி, விசாரித்தனர்.
அப்போது அவர், தன்னுடைய வீட்டுக்கு வழிவிடாமல் ஒருவர் மிரட்டி வருவதாகவும், இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்வதற்காக வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.