எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திருடிய இரும்பு பொருட்களை படகில் கடத்திய 2 வாலிபர்கள்

கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திருடிய இரும்பு பொருட்களை படகில் கடத்திய 2 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் கடலில் குதித்து தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-04-25 16:45 GMT
சிதம்பரம், 

கடலூரை அடுத்த புதுச்சத்திரம் அருகே பெரியகுப்பம் கிராமத்தில் என்.ஓ.சி. என்ற தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தாக்கிய தானே புயலுக்கு பிறகு இந்த ஆலை செயல்படவில்லை. இதை நோட்டமிட்ட 50 பேர் கொண்ட கும்பல், ஆலையில் உள்ள இரும்பு பொருட்களை திருடி வருகிறது. 
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த கும்பல் திருடியபோது ஆலை காவலாளிகள் வந்ததால் தங்களது வாகனங்களை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடியது. இது பற்றி தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீசார் விரைந்து சென்று திருட்டு கும்பல் விட்டு சென்ற மினி லாரி, ஆட்டோ மற்றும் 26 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

படகில் கடத்தல் 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள இரும்பு பொருட்களை 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் திருடி பேட்டோடை கடற்கரைக்கு வந்தனர். பின்னர் அங்கு தயாராக நிறுத்தி வைத்திருந்த மீன்பிடி படகில் இரும்பு பொருட்களை ஏற்றினர்.  இதை அப்பகுதியில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் பார்த்து, புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது, 2 வாலிபர்களும் திருடிய இரும்பு பொருட்களை படகில் வைத்து கடல் வழியாக கடத்தினர். 

கடலில் குதித்த வாலிபர்கள் 

உடனே போலீசார், 2 பேரையும் படகுடன் கரைக்கு திரும்புமாறு எச்சரித்தனர்.  போலீசாரை கண்டதும் 2 வாலிபர்களும் கடலில் குதித்து தப்பிச்சென்றனர். பின்னர் போலீசார், மீனவர்கள் உதவியுடன் அந்த படகை கரைக்கு கொண்டு வந்தனர். அந்த படகில் 1000 கிலோ இரும்பு பொருட்கள் இருந்தன.  இதையடுத்து இரும்பு பொருட்களுடன் படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலில் குதித்து தப்பிச்சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்