நைஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட 543 ஏக்கர் நிலத்தை திரும்ப பெறப்படும்-மந்திரிசபை துணைக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு

நைஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட 543 ஏக்கர் நிலத்தை திரும்ப பெறுவது குறித்து மந்திரிசபை துணைக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது;

Update: 2022-04-25 16:44 GMT
பெங்களூரு: நைஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட 543 ஏக்கர் நிலத்தை திரும்ப பெறுவது குறித்து மந்திரிசபை துணைக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மந்திரிசபை துணைக்குழு கூட்டம்

பெங்களூருவில் நேற்று மந்திரிசபை துணைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், கூட்டுறவுத்துறை மந்திரி சோமசேகர், பொதுப்பணித்துறை மந்திரி பி.சி.பட்டீல் மற்றும் தலைமை செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நைஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப பெறுவது குறித்து மந்திரிசபை துணைக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

543 ஏக்கர் நிலம் திரும்ப...

பெங்களூரு மாநகராட்சியில் சாலை அமைத்தல், மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நைஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக 543 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு இருந்தது. அதாவது நிர்ணயித்த காலத்திற்குள் பெங்களூரு மாநகராட்சியுடன் செய்து கொண்ட திட்டங்களை நைஸ் நிறுவனம் முடிக்கவில்லை. அதனால் அந்த நிறுவனத்திற்கு கூடுதலாக வழங்கிய 543 ஏக்கர்நிலத்தையும் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.100 கோடி ஆதாயம் கிடைக்கும். கடந்த காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் தான் நைஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக 543 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டு இருந்தது.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று ஏற்கனவே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் தெரிவித்துள்ளார். அதனால் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்