கர்நாடகத்தில், மூத்த மந்திரிகள் 15 பேர் நீக்கம்?-பரபரப்பு தகவல்கள்

மந்திரிசபையை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ள பா.ஜனதா மேலிடம், மூத்த மந்திரிகள் 15 பேரை நீக்க முடிவு செய்திருப்பதாகவும், அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

Update: 2022-04-25 16:41 GMT
பெங்களூரு: மந்திரிசபையை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ள பா.ஜனதா மேலிடம், மூத்த மந்திரிகள் 15 பேரை நீக்க முடிவு செய்திருப்பதாகவும், அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

15 மந்திரிகளை நீக்க முடிவு

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு (2023) கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 150 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போதில் இருந்தே மாநிலத்தில் பா.ஜனதாவை பலப்படுத்த மேலிட தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதையடுத்து, கர்நாடக மந்திரிசபையை மாற்றியமைத்து விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள 15 மூத்த மந்திரிகளை நீக்கிவிட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

புதியவர்களுக்கு வாய்ப்பு

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருப்பதால், குஜராத் மாநிலத்தை போன்று, கர்நாடகத்திலும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சில மந்திரிகளை தவிர்த்துவிட்டு மற்ற 15 மந்திரிகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக தற்போது பல்வேறு துறைகளில் 40 சதவீத கமிஷன் கேட்கப்படுவதாக அரசு மீது ஒப்பந்ததாரர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றச்சாட்டு கூறிவருகிறார்கள்.
இந்த 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு காரணமாக பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இதன்காரணமாகவே 15 மூத்த மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு மந்திரி பதவியில் இருந்து நீக்கப்படும் 15 பேரையும் கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபடுத்த பா.ஜனதா மேலிட தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பசவராஜ் பொம்மைக்கு உத்தரவு

முதல்-மந்திரிகளுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 29-ந் தேதி டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். அப்போது புதிய மந்திரிகளுக்கான பட்டியலை எடுத்து வரும்படி பசவராஜ் பொம்மைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எக்காரணத்தை கொண்டும் மந்திரிகள் பட்டியல் வெளியே கசியக்கூடாது என்றும் பசவராஜ் பொம்மைக்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது.
ஏனெனில் மந்திரி பதவியை எதிர்பார்த்து ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் காத்திருக்கின்றனர். 

இதனால் ரகசியமாக மந்திரி பட்டியலை தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த பல மாதங்களாக மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிக்கொண்டே சென்ற வண்ணம் இருந்ததால், இந்த மாத இறுதியில் பசவராஜ் பொம்மை டெல்லிக்கு சென்று திரும்பிய பின்பு, அடுத்த மாத தொடக்கத்தில் மந்திரிசபை மாற்றியமைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்