மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை: 2 ஆண்டுகளுக்கு பிறகு வாலிபர் கைது
மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் ஆர்.சி. தெரு புது காலனி பகுதியை சேர்ந்த காளியப்பன் மனைவி பாப்பா (வயது 65). இவர் கடந்த 2.2.2020 அன்று தங்களது நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பருத்தியை எடுப்பதற்காக சென்றார்். அவர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (33) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையில் அவர் ஒரு வழக்கில் சிக்கி கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை கடந்த 20-ந்தேதி எட்டயபுரம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி பாப்பாவை கொலை செய்ததை அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் மாவீரனை கைது செய்து கோவில்பட்டி நீதிமன்ற எண் 2-ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.