தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
மூதாட்டியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.
வெளிப்பாளையம்:
மூதாட்டியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.
மூதாட்டி மீது தாக்குதல்
நாகை மாவட்டம் வலிவலம் போலீஸ் சரகம் கீரங்குடியை சேர்ந்த நாகமுத்து மனைவி சரசு(வயது 60). இவர், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி கீரங்குடி மெயின் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பு நின்று திட்டடிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த வலிவலம் கோவில்பத்து பகுதியை சேர்ந்த செல்வகணபதி மகன் ராமமூர்த்தி(36) என்பவர், தன்னை தான் திட்டுவதாக நினைத்துக்கொண்டு சரசுவிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராமமூர்த்தி, சரசுவை தாக்கி உள்ளார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளியான ராமமூர்த்தியை கைது செய்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரசு நவம்பர் 21-ந் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி வலிவலம் போலீசார் பதிவு செய்தனர்.
10 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு நாகை மாவட்ட மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர் செல்வம் நேற்று தீர்ப்பு அளித்தார்.
அந்த தீர்ப்பில் ராமமூர்த்திக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராமமூர்த்தியை பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.