திருவள்ளூரில் புகையிலை பொருட்களை விற்றவர் கைது
திருவள்ளூரில் புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் திருவள்ளூர் வள்ளுவர்புரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், தான் வைத்திருந்த பெரிய பையுடன் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.
இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது பிடிபட்ட நபர் திருவள்ளூர் வள்ளுவர் புரத்தை சேர்ந்த புண்ணியகோட்டி (வயது 48) என்பதும், அவர் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 300 பாக்கெட்டுகள் இருந்ததும் தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் புண்ணியகோட்டியை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.