நாமக்கல்லில் மண்எண்ணெய் வழங்கும் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
நாமக்கல்லில் மண்எண்ணெய் வழங்கும் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
நாமக்கல்:
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் மண்எண்ணெய் வழங்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நகராட்சிக்கு உட்பட்ட 12 ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வாரத்தில் குறிப்பிட்ட நாளில் மண்எண்ணெய் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று மண்எண்ணெய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், நேற்று காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் அந்த நிலையத்திற்கு முன்பு காத்திருந்தனர். காத்திருந்த பொதுமக்களுக்கு 2 லிட்டர் மண்எண்ணெய் வழங்குவதற்கு பதிலாக ஒரு லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மாதமும் ஒரு லிட்டரே வழங்கப்பட்ட நிலையில், இம்மாதமும் ஒரு லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதால் எப்படி? அதை வைத்து பயன்படுத்துவது என கூறி விற்பனையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் இம்மாதம் மண்எண்ணெய் குறைந்த அளவே வந்து உள்ளதாகவும், அதனால் குறைவாக வழங்குவதாகவும், அடுத்த மாதம் முழு அளவு வழங்கப்படும் எனவும் தெரிவித்து பொதுமக்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.