பஸ்சில் தவற விட்ட 2 பவுன் நகை மீட்பு

திருப்பத்தூர் அருகே பஸ்சில் இளம்பெண் தவற விட்ட 2 பவுன் நகை மீட்கப்பட்டது.

Update: 2022-04-25 15:35 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாபட்டு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மணியம்மாள் (வயது 28). இவர்களுக்கு 5 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. மணியம்மாள் கடந்த 14-ந் தேதி வாணியம்பாடி அருகே உள்ள கலந்திராவுக்கு தனது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கைக்குழந்தையுடன் தனியார் பஸ்சில் சென்றார். 

அப்போது ஒரு பர்சில் 2 பவுன் நகை மற்றும் ரூ.1,000 பணம் ஆகியவற்றை வைத்து அதனை ஒரு பையில் வைத்துள்ளார். கலந்திராவுக்கு சென்று பஸ்சில் இருந்து இறங்கி பார்த்த போது பர்சை காணவில்லை. உடனடியாக மணியம்மாள் நேரடியாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். 

அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் தமைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், மணியம்மாள் பயணம் செய்த பஸ்சில் அவருடன் பயணம் செய்த ஏலகிரிமலை பகுதியை சேர்ந்த 2 பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நகை பஸ்சில் கீழே விழுந்து கிடந்ததாகவும், அதை எடுத்து வந்து அப்படியே வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

 அதைத்தொடர்ந்து நகை மற்றும் பணத்தை அவர்களிடம் இருந்து பெற்று, மணியம்மாளிடம் துணைபோலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் வழங்கினார்.

மேலும் செய்திகள்