கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு
பொள்ளாச்சியில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பணம் திருட்டு
பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூரை சேர்ந்தவர் ஈஸ்வரசாமி (வயது 65), விவசாயி. இவர் நியூஸ்கீம் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் தனது நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கினார்.
இந்தநிலையில் வங்கியில் இருந்து கடன் தொகையான ரூ.3 லட்சத்து 16 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, தனது தங்கை மகனான இந்திர விஷ்ணு என்பவருடன் காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். இதற்கிடையில் மதியம் நேரமானதால் சாப்பிட்டு விட்டு செல்வதற்காக கோவை ரோட்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு வந்தார்.
பின்னர் உணவகம் அருகே வாகன நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தி விட்டு 2 பேரும் சாப்பிட சென்றனர். சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
காருக்குள் இருந்த ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் மகாலிங்கபுரம் போலீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள்.
கண்காணிப்பு கேமரா
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஈஸ்வரசாமியும், இந்திர விஷ்ணுவும் சாப்பிட சென்ற பிறகு மர்ம நபர்கள் 2 பேர் கார் அருகே வந்தனர்.
ஒருவர் ஆட்கள் நடமாட்டத்தை நோட்டமிட்டதுடன், மற்றொருவர் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருடி சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.
மேலும் ஈஸ்வரசாமி பணம் எடுத்த வங்கிக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதேபோன்று நியூஸ்கீம் ரோடு, கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.