உதவி பேராசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண் கைது

உதவி பேராசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஒரு பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-04-25 15:29 GMT
பெங்களூரு:

வினாத்தாள் வெளியானது

  கர்நாடகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிகளுக்கு கடந்த மாதம் (மார்ச்) தேர்வு நடந்து இருந்தது. இந்த நிலையில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு நடப்பதற்கு முன்பே தேர்வு வினாத்தாள் வெளியாகி இருந்தது. அதாவது அந்த வினாத்தாளில் இடம்பெற்று இருந்த 11 கேள்விகளுக்கு உரிய பதில்கள் வாட்ஸ்-அப் மூலம் வெளியாகி இருந்தது.

  இதுகுறித்து கர்நாடக தேர்வாணைய நிர்வாக இயக்குனரான ரம்யா என்பவர் மல்லேசுவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின்பேரில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையின் போது தேர்வு வினாத்தாள் வெளியானது தெரியவந்தது.

பெண் கைது

  இந்த நிலையில் சவுமியா என்ற பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து தான் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மைசூருவில் வைத்து சவுமியாவை மல்லேசுவரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கர்நாடகத்தில் ஏற்கனவே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு, பொதுப்பணித்துறை என்ஜினீயர் தேர்வுகளில் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், உதவி பேராசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பெண் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்