கொள்ளை முயற்சி; ரவுடி உள்பட 5 பேர் கைது
பெங்களூருவில் கெங்கேரி பகுதியில் கொள்ளையடிக்க முயன்ற ரவுடி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;
பெங்களூரு:
பெங்களூரு கெங்கேரி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கெங்கேரியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்ததை போலீசார் பார்த்தனர். இதனால் காரின் அருகே சென்ற போலீசார் காருக்குள் இருந்த 5 பேரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் 5 பேரும் தனியாக வருபவர்களை மிரட்டி கொள்ளையடிக்க நின்று கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதனால் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் ரவுடி ஆவார். அவரது பெயர் சீனிவாஸ் ஆகும். கைதானவர்களிடம் இருந்து ஒரு கார், 5 செல்போன்கள், கத்தி, இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 5 பேர் மீதும் கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.